விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தேசம்காப்போம்' பொதுக்கூட்டம் திருவள்ளூர் பஜார் வீதியில் மாவட்ட செயலாளர் சித்தார்த் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சுந்தர் தமிழினியன், இராசகுமார் மற்றும் நிர்வாகிகள் பூண்டி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். ஆனால் மத்தியில் ஆளும் மோடி அரசு சமத்துவத்தை உடைத்து சகோதரத்துவத்தை பிளந்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்து வருகிறது. இந்து சமயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உள்ளது. ஆணுக்குப் பெண் அடிமை என சாஸ்திரம் கூறுகிறது.
திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு ஆனால், இஸ்லாம் மதத்தில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளதால் அவர்களால் ஏற்க முடியவில்லை. நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சனாதனத்துக்கு எதிரானவர்கள். மக்களைப் பிளவுபடுத்தும் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள். மோடி அரசு செய்யும் சூழ்ச்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்திவிட்டது.
நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் 25 சதவிகிதம் உள்ளனர். இவர்கள் சேர்ந்து எதிர்த்தால் நாடு தாங்காது என்பதை கருத்தில் கொண்டு தனித்தனியாக சூழ்ச்சி செய்து இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றுகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை