திருவள்ளூர்:திருத்தணி நகரத்தில் பாப்பிரெட்டிபள்ளி என்ற இடத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நடைபெற்ற தடுப்பூசி முகாம் பகுதியில் மா. சுப்பிரமணியன் நேற்று (நவம்பர் 14) ஆய்வுமேற்கொண்டார்.
மேலும், இந்தப் பகுதியில் 100 விழுக்காடு தடுப்பூசி முகாம் பழங்குடியின மக்களுக்குப் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்தப் பழங்குடியின மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் போன்ற நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் தமிழ்நாடு அரசின் வீடு தேடி மருத்துவம் திட்டம், கரோனா தடுப்பூசி முகாம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வுமேற்கொண்டேன். மிகச் சிறப்பான முறையில் மாவட்டத்தில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 950 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது. திருத்தணியில் சிறப்பான முறையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்கள், மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களில் சிறப்பான முறையில் தடுப்பூசி முகாம், வீடு தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றுவருகிறார்கள்.
வீடு தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது.