திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த கோரைக்குப்பம் பகுதியில் டிசம்பர் 5ஆம் தேதி ஆளில்லா குட்டி விமானம் ஒன்று கரை ஒதுங்கியது. அது உடைந்த நிலையில், இருந்ததைக் கண்ட அப்பகுதி மீனவர்கள், இது குறித்து வருவாய்த் துறை, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், திருப்பாலைவனம் காவல் துறையினர் அங்கு சென்று அதனைப் பறிமுதல்செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து, ஆளில்லா குட்டி விமானம் எதற்காக இப்பகுதிக்கு வந்தது, எப்படி வந்தது? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
குறிப்பாக பழவேற்காடு கலங்கரை விளக்கம், எண்ணூர் துறைமுகம், எல்என்டி துறைமுகம், வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் இருக்கும் இந்தப் பகுதியில் கடலில் ஆளில்லா குட்டி விமானம் விழுந்திருப்பது சந்தேகத்தை எழுப்பியது.
மேலும் உளவுபார்க்க அனுப்பப்பட்டதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், இன்று ஆந்திர விமானப் படையினர் அது தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி திருப்பாலைவனம் காவல் நிலையத்திலிருந்து அதனைத் திரும்பப் பெற்றுச் சென்றுள்ளனர்.