திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெங்கடாபுரம் கிராமம் வழியாக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ஆந்திராவிலிருந்து வெங்கடாபுரம் பகுதிவழியாக கஞ்சா கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வெங்கடாபுரம் ஏரிக்கரைப் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை காவல் துறையினர் நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளனர்.
இதில், சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்களையும், அவர்களது வாகனத்தையும் பரிசோதனை செய்தபோது, 150 கிராம் கஞ்சா பொட்டலத்தை நெகிழிப் பைகளில் அடைத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த சிதம்பரம், ராமன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல்செய்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இதேபோன்று கஞ்சா கடத்திவந்த மூன்று நபர்களை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், ஆந்திர மாநில காவல் துறையினரும் சேர்ந்து இதுபோன்ற கஞ்சா கடத்தல் நடைபெறாமல் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கடாபுரம் பகுதி மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா விற்பதில் தகராறு - இளைஞரை வெட்டிய 4 பேர் கைது