திருவள்ளூர்: திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி ஆடு மேய்த்தல் தொழில் செய்கிறார். தனக்கு சொந்தமான 30 ஆடுகளை அவர் மேய்த்துக்கொண்டிருந்தபோது ஆட்டோவில் மூன்றுபேர் வந்தனர்.
அவர்கள் முனுசாமியிடம் பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி ஆடுகள் வேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி முனுசாமி நான்கு ஆடுகளை ரூ. 64 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளார். இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் 32 வீதம் ரூ.64 ஆயிரத்தை கொடுத்துவிட்டு ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் முனுசாமி பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அது கள்ளநோட்டு என கண்டுபிடித்துள்ளனர். இதனை உறுதி செய்வதற்காக அருகிலிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று வழங்கியபோது அனைத்து ரூபாய் தாள்களும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த முனுசாமி உடனடியாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.