திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான உதயகுமாருக்கு, மாலதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 23ஆம் தேதி உதயகுமார் வழக்கம் போல காய்கறி வியாபாரத்திற்குச் சென்றதும், இரண்டு மகள்கள் பள்ளிக்குச் சென்று விட்டனர். மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மாடி வழியே வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் ஆகியவற்றைத் தரும்படி கேட்டுள்ளார். மாலதி மறுக்கவே அவரை அரிவாளால் தாக்கிவிட்டு, கைகளையும் வாயையும் கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். மாலதியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாலதிக்கு கை, கால் என ஐந்து இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.