திருவள்ளூர்:சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. ரூ.65 லட்சம் செலவில் 1939-ல் நீர்த்தேக்க கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி, பூண்டி ஏரியைக் கட்ட பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆகையால் இந்த நீர்தேக்கத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
தற்போது பூண்டி ஏரி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. 8458 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நீர் தேக்கத்தின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். மீதமுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீர்த்தக்கத்தில் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் நீர் திறந்து விடப்படும். கடந்த டிசம்பர் மாதம் திருவள்ளூரில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்ததால் ஏரி முழுவதுமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. ஆகையால் உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் கலந்தது. ஆகையால் அணையை இரண்டு அடி உயர்த்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பூண்டி ஏரியை ஆய்வு செய்தார்.