தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 11:46 AM IST

ETV Bharat / state

பொங்கல் பண்டிகைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்.. இரு குழந்தைகளும் உயிரிழப்பு - பெற்றோருக்கு தொடரும் சிகிச்சை!

Car Accident: மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் டிராக்டர் மீது சொகுசு கார் மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் மகள், மகன் இருவரும் உயிரிழந்த நிலையில், தந்தை, தாய் மற்றும் டிராக்டர் ஓட்டுநர் மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Car Accident
டிராக்டர் மீது சொகுசு கார் மோதி கோர விபத்து

திருவள்ளூர்: மீஞ்சூரைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகம் - மகேஸ்வரி. இவர்கள் கடை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களது மகள் கவி வர்ஷா (18) தனியார் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பும், மகன் கவி வர்ஷன் (14) தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்துடன் தங்களது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்று விட்டு, இன்று மீண்டும் மீஞ்சூருக்கு திரும்பியுள்ளனர். அப்போது காரை மகேஸ்வரி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் கார் தலை குப்புற கவிழ்ந்து சுக்கு நூறாக நொறுங்கியுள்ளது.

மேலும், டிராக்டரும் சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கார் பல முறை சுழன்று தலை குப்புற கவிழ்ந்ததில், மகள் கவி வர்ஷினி காரில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் மகன் கவி வர்ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது காரும், டிராக்டரும் மோதிய விபத்தில் மகள், மகன் உயிரிழந்த நிலையில், தந்தை சண்முகம், தாய் மகேஸ்வரி, டிராக்டர் ஓட்டுநர் சந்தோஷ் ஆகிய மூவரும் படுகாயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பாக, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது விபத்தில் மகள், மகன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அடிதடியில் இறங்கிய அர்ச்சகர்கள்.. மீண்டும் வெடித்த வடகலை-தென்கலை விவகாரம்!

ABOUT THE AUTHOR

...view details