திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், மாந்தோப்பு சாலையில் தனியாருக்குச் சொந்தமான விடுதி செயல்பட்டுவருகிறது. இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டு இங்கு வந்தால் சமையல் செய்ய அடுப்புகள் என அனைத்தும் இருக்கும்.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி பெருங்குடியைச் சேர்ந்த ரெய்ஸ் ராஜா (34), அவரது நண்பர்கள் மாசி (என்ற) ராஜேஷ், ராஜி (என்ற) ஞானவேல்ராஜா, விக்னேஷ், முகமது ரசாக் ஆகிய ஐந்து பேரும் விடுதியில் தங்கியுள்ளனர்.
சம்பவத்தன்று ராஜேஷ், ஞானவேல்ராஜா, முகமது ரசாக் ஆகியோர் மதுபானம் வாங்க வெளியே சென்றுவிட்டனர். அப்போது ரெய்ஸ் ராஜா, விக்னேஷ் இருவரும் சாராயம், கஞ்சா, போதையேற்றும் ஒருவித அமிலத்தைச் சேர்த்துக் காய்ச்சியுள்ளனர்.
அப்போது, ராஜா சிகரெட்டை பற்றவைத்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அவருக்கும், விக்னேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்றனர். ராஜாவின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தவர்கள், மேற்கொண்டு செய்வதறியாமல் அவரை அறையிலிருந்து வெளியே இழுத்துப்போட்டனர்.
போதை வஸ்து காய்ச்சும்போது தீ விபத்து விடுதிக்குத் திரும்பிய நண்பர்கள், ராஜாவை மீட்டு நொளம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல் துறையினர் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ராஜா, விக்னேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கஞ்சா, சாராயம், ஒரு அமிலத்தைச் சேர்த்துக் காய்ச்சும்போது கிடைக்கும் ஜெல்லைக் கொண்டு புகைத்தால் அதிகளவில் போதையேறும் என்பதால் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: அதிமுகவால் மீண்டும் ஒரு விபத்து... இந்த முறை பேனர் இல்லை கொடிக் கம்பம்!