திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் திருநங்கை செவ்வந்தி. கடந்த சில தினங்களுக்கு முன்பு செவ்வந்தி திருத்தணியிலிருந்து உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
லிப்ட் கொடுத்த நபர் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள தெக்கலூர் நந்தி ஆற்றுப்பாலத்தில் அருகே செவ்வந்தியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவ்வந்தியை அடித்து உதைத்து அவரிடமிருந்து நகைகளை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
பாதிக்கப்பட்ட செவ்வந்தி திருத்தணி காவல் நிலையத்திலும், திருத்தணி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல் துறை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள டிஎஸ்பி அலுவலகம் அருகே 10 பேர் கொண்ட திருநங்கைகள் தங்களுடைய ஆடைகளை களைந்து நிர்வாண கோலத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் காவல்துறையினர் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தனர். உடனே, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.