மதுரவாயல் பகுதியை அடுத்துள்ள சீமாத்தம்மன் நகரின் பெரியார் தெருவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளிகள் பாலா, பிரதீப், கார்த்தி, ஜெகன் ஆகிய நால்வரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்து வருகின்றனர். நேற்று மாலை, இந்த நால்வரும் திருவேற்காட்டை அடுத்துள்ள வேலப்பன்சாவடியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக ஏஜென்சி ஒன்றின் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 15 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், கழிவுநீர் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள சகதிகளை அகற்றுவதற்காக 4 பேரும் அந்த தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். முதலில் துப்புரவுத் தொழிலாளி பாலா இறங்கி அடியில் உள்ள சகதிகளைக் கிளறும் போது அவரை விஷவாயு தாக்கி உள்ளது. அப்போது ஏற்பட்ட மூச்சுத் திணறலில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். இதனைக் கண்டதும் மற்ற மூன்று பேரும் இறங்கிக் கொண்டு இருக்கும்போதே, விஷவாயு அச்சத்தினால் மீண்டும் மேலே வந்துள்ளனர். துப்புரவுத் தொழிலாளி பாலாவை அதிலிருந்து மீட்க கடுமையாகப் போராடியும் முடியவில்லை.
உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி பாலா இதுகுறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி தீயணைப்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு கவசங்களுடன் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கிக் கிடந்த பாலாவை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர், அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, இறந்த துப்புரவுத் தொழிலாளி பாலாவின் உடல் கூறாய்வுகாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் தொட்டியில் விஷவாயுத் தாக்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழப்பு! 1993 ஆம் ஆண்டே கையால் மலம் அள்ளுவதையும், பாதாள சாக்கடையில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இருந்தும் தொடர்ந்து இத்தகைய மனித மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நட்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், சம்பந்தப்பட்ட நபர்களை உரிய விசாரணை நடத்தி கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கும் கட்டிட உரிமையாளர்கள் மீதும் சட்டவிரோதமாக ஏற்பாடு செய்த ஏஜென்சியின் உரிமையாளர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: அம்பத்தூரில் இஸ்லாமியர்கள் கண்டன பொதுக்கூட்டம்