திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வாயலூர் கிராமத்தில் உள்ள சின்ன தாமரை, பெரிய தாமரை, மாமணிக்கால் ஆகிய 3 ஏரிகளை இணைத்து, புதிய நீர் தேக்கம் உருவாக்குவது தொடர்பாக நேற்று (ஜன. 22) தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறு சீரமைப்பு கழகத் தலைவர் சத்தியகோபால் தொடர்புடைய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் நீர் தேக்கம் உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளான மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இரட்டை ஏரிகளான காட்டூர் - தத்தமஞ்சி ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி நீர் தேக்கம் அமைத்தல், கடல்நீர் ஊடுருவலை கட்டுப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.