திருவள்ளூர்:வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்தப் புயல் நாளை ஆந்திர எல்லை பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவள்ளுவர் மாவட்டத்தில் நாளை (டிச.04) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது அதனுடைய தாக்கம் குறிப்பாக பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கடலோரப் பகுதிகளில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து இடங்களிலும் அனைத்து முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட அறிக்கையில், “புயல் காரணமாக வருகிற நான்காம் தேதி அதிக கன மழை ஏற்பட வாய்ப்புள்ளது. அன்றைய நாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. முன் ஏற்பாடு நடவடிக்கையாக பல்வேறு துறைகளை சார்ந்த 64 குழுக்கள் அமைத்து அனைத்து துறைகளையும் சார்ந்த அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதே போல் புயல் காரணமாக அதிக காற்று வெள்ளமும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்காலிக தங்குமிடங்கள் மாவட்ட முழுவதும் 500 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை புதிய வசதிகள் உடன் தயார் நிலையில் உள்ளன.