இந்த ஆண்டு நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் 23 பேர் மருத்துவ படிப்பிற்கும் 5 பேர் பல் மருத்துவ படிப்பிற்கும் என மொத்தம் 28 பேர் மருத்துவ கலந்தாய்வில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் சென்னை போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பழங்குடியின பிரிவு (எஸ்.டி) மாணவி சினேகா அந்த பிரிவிற்கான தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்று (295 மதிப்பெண்) ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார்.
மேலும் நடப்பாண்டு மாணவிகளுள் முதலிடம் பெற்ற போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ரசிகா 439 மதிப்பெண் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். பொதட்டூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் மாணவி நர்மதா 410 மதிப்பெண் பெற்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ளார். அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரியா 375 மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் ஊக்குவிப்பும் உற்சாகமும் தந்து கொண்டிருக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.ஏ. ஆறுமுகம் மாணவர்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் இந்த மாணவர்களுக்கு இரவு பகல் பாராது சிறப்பாக பயிற்சி அளித்த திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் திமுக வசமாக வேண்டும் - அமைச்சர் கே.என். நேரு