கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு காய்கறி சந்தையானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை நகர பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
இப்பகுதியில், கடைகள் பெருமளவில் வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதி , அத்தியாவசிய தேவைகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளியலறை, கழிவறைகள், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், சூரிய சக்தியால் இயங்கும் மின் விளக்குகள், காவல் துறை உயர் கண்காணிப்பு கோபுரங்கள், காவல் உதவி மையங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சந்தைக்கு வெளியூர்களிலிருந்து வரும் அனைவரும் கிருமி நாசினிகள் முழுமையாக அளிக்கப்பட்ட பின் அனுமதிக்கப்படுவது, மருத்துவ முகாம்கள் வாயிலாக வெளி நபர்கள் தெர்மாமீட்டர் கொண்டு பரிசோதிக்கப்படுவது, நில வேம்பு, கபசுர குடிநீர், ஜீன் மாத்திரைகள் வழங்கப்படுவது, தகந்த இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சீராக வழங்கப்படுவதும் குளியலறை மற்றும் கழிவறைகள் ஆகியவை சுத்தமாக சுகாதாரமாக பராமரிக்கப்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மண்டல காவல் துறை தலைவர் தேன்மொழி, திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், சிறப்பு வருவாய் அலுவலர், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.