பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு திருவள்ளூர்:மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றது. இந்நிலையில், மிக்ஜாம் புயலானது நேற்று ஆந்திரா பகுதிக்குச் சென்றதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்யவில்லை.
இந்நிலையில், மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் நிரம்பி வருகிறது. அதன்படி, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3 ஆயிரத்து 458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். கடந்த ஆட்சியில் ஏரியைச் சுற்றியுள்ள வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதால், சிறு மழை பெய்தாலும் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகளவில் கிடைத்தது.
இந்நிலையில், சில நாட்களாக பெய்து வரும் மழையால் வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர்வரத்து, 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும், நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 35 அடியில் தற்பொழுது 33.50 அடிக்கு நீர் உள்ளது. அதாவது, மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில், தற்போது நீர் இருப்பு 2 ஆயிரத்து 823 மில்லியன் கன அடியாக உள்ளது.
சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, நேற்றைய தினத்தில் 48 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்ற நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் அறிவுறுத்தலின் பேரில், அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து 3 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.
எனவே, நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!