திருவள்ளூர்: வேப்பம்பட்டு ரயில்வே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2010ல் இருந்து கட்டப்படும் மேம்பாலப் பணிகள் இன்னும் முடியாததே விபத்து காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வேப்பம்பட்டு பகுதியிலிருந்து திருமழிசை, பூந்தமல்லி, புதுச்சத்திரம் பாதையில் சென்னை செல்வதற்குப் பிரதான வழியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே, ரயில்வே இருப்புப் பாதையைக் கடப்பதற்கு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் உடனடியாக ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்துக் கடந்த 2010ஆம் ஆண்டு சுமார் 30 கோடி அளவில் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு 41% முடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வரை பணிகள் மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளதால் ரயில்வே இருப்புப் பாதையைக் கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.