திருவள்ளூரில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். இந்தக் கோயில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 60ஆவது திவ்யதேசம் இத்திருத்தலமாகும்.
இக்கோயில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 21ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாளான 4ஆம் தேதி தை அமாவாசையையொட்டி உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ரத்தின அங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனையடுத்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த்திருவிழா நடந்தது. தேரோட்டத்தையொட்டி வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காலை திருத்தேரில் எழுந்தருளினார்.
மேளதாளம், நாதஸ்வரம் முழங்க வீரராகவப் பெருமாள் எழுந்தருளிய தேர் அசைந்தாடியபடி வீதியுலா புறப்பாடு தொடங்கியது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
கோவிந்தா கோவிந்தா கோஷத்தில் அசைந்தாடி வந்த வீர ராகவப் பெருமாள் தொடர்ந்து, வடக்கு ராஜ வீதி, பஜார் தெரு, மோதிலால் தெரு வழியாக வீரராகவர் தேரில் அசைந்தாடி வரும் காட்சியைக் காண கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :'சவால் வேண்டாம்... களத்தில் இறங்குங்கள்' - கொங்கு ஈஸ்வரனுக்கு விவசாயிகள் கோரிக்கை