திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் பகுதியைச் சேர்ந்த பாலாஜி - பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் சாய்குமார். ஏசி மெக்கானிக்கான இவர் சென்னையில் வசிக்கும்போது தீபிகா (21) என்ற இளம் பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த தீபிகாவின் தந்தையும் விருப்ப ஓய்வுப் பெற்ற தலைமை காவலருமான பாலகுமார், வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் திருத்தணியில் குடியேறினார். பின்னர் அங்குள்ள கல்லூரியில் மகளை சேர்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாதவாறு அடைத்துவைத்து சித்திரவதை செய்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா, சாய் குமாருக்கு கடந்த ஜூன் மாதம் போன் செய்து வரவழைத்து பெங்களூருக்குச் சென்று திருமணம் செய்துகொண்டார். இரண்டு மாதம் வெளியூரில் தங்கியிருந்த அவர்கள், சமீபத்தில்தான் சாய்குமார் தனது மனைவி தீபிகாவை வேப்பம்பட்டில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
இதையும் படிங்க:ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் மேற்படிப்பில் ஆர்வம் காட்டும் சிங்கப் பெண்!
இதனையறிந்த பாலகுமார், மகளை மனமாற்றி அழைத்துவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அவரின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் வருமாறு நிர்பந்தித்துள்ளார். இதற்கு தீபிகா மறுக்கவே, ஆத்திரமடைந்த பாலகுமார் தன்னுடன் வந்திருந்த நான்கு குண்டர்களை வைத்து பவுடர் கலந்து அமிலத்தை தீபிகாவின் முகத்தில் பூசியுள்ளார்.
இதனைத் தடுக்க வந்த மாமியார் மீதும், வீட்டில் இருந்த மற்றொரு மருமகள் முகத்திலும் அமிலத்தை வீசிவிட்டு, தீபிகாவை மட்டும் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீச்சு; தந்தையின் கொடூர செயல்! இதனை அறிந்த தீபிகாவின் தந்தை, தனது நண்பரின் காரில் இரவு 1 மணி அளவில் வேப்பம்பட்டு முக்கிய சாலையில் தீபிகாவை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். முகத்தில் அமிலத்தைப் பூசிவிட்டு காரில் கடத்திச் சென்ற பாலகுமார், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் சொந்த மகளை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், சாய்குமாரைவிட்டு வரவில்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் தீபிகா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
முகத்தில் அமிலத்தை வீசியதால், முகம் வெந்து மிகுந்த வலியோடு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபிகாவின் மாமியார், அவரின் உறவினரான மற்றொரு கர்ப்பிணி பெண் ஆகியோரும் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தன் மகள் என்றும் பாராமல், கர்ப்பிணி என்பதை கூட உணராமல் மனிதாபிமானமற்று அமிலம் வீசித் தாக்கிய பாலகுமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீபிகா கணவர் வீட்டு உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலகுமாரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:இந்து முறைப்படி மீண்டும் திருமணம் - எல்லைகளைத் தாண்டிய காதல் கதை