சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் கரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ஏப்ரல் 26 முதல் 29ஆம் தேதி வரை நான்கு தினங்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனையடுத்து சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, திருமழிசை, மீஞ்சூர், சோழவரம், நாரவாரிகுப்பம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள 47 கிராமங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், ' திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டியுள்ள 47 கிராமங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரடங்குத் தடை உத்தரவை மீறியதாக, இதுவரை 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பத்தாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் விற்று வருபவர்களைக் கண்டறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊரடங்கு குறித்து விவரிக்கும் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கள்ளச்சாராயம் காட்சியதாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்குத் தொடர்ந்து பத்து நாள்களுக்கு வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. இதனைக் காவல் துறையினர் கடைப்பிடித்து வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காவல் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு!