திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே மேம்பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகளானது தொடங்கப்பட்டது. ஆனால், பணியானது 50 சதவீதம் நிறைவடைந்த பின், எவ்வித பணிகளும் மேற்கொள்ளாமல் கிடப்பில் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் தண்டவாளத்தைக் கடந்து ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்றைய முன்தினம், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தந்தை மற்றும் இரண்டு மகள்கள் என மூன்று பேர் மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலப் பணிகள் குறித்தும், தற்காலிகமாக பாதை அமைத்து தருவது குறித்தும் அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகள் முழுமையாக செய்வதற்கு நில எடுப்பு சம்பந்தமான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வே நிர்வாக அதிகாரிகளிக்கும் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும், ரயில் நிலையத்தில் சரியான நடைபாதை அமைத்து தரப்படும் எனவும் உறுதி அளித்ததாகவும்” தெரிவித்தார்.