உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சில நபர்கள் அது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அதேபோல், கோழிக்கறி சாப்பிடுவதால் கரோனா வைரஸ் பரவுகிறது என வாட்ஸ் ஆப் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டன.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் வதந்தி பரப்பினர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (37), அவரது நண்பர் பெஞ்சமின் (33) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர். அதில், அவர்கள் இருவரும் தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருவதும், கார் நிறுவனம் விடுமுறை விடுவதற்காக தவறான வதந்திகளைப் பரப்பியதும் தெரியவந்தது.
பின்னர் காவல் துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கரோனா வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கோவிட்-19 பெருந்தொற்று: சபரிமலைக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை