திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏரிகளை ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தப்படும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர்! - studied maheshwari
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துத் திட்டப் பணிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிமராமத்து திட்டப்பணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் மூன்று பெரிய ஏரிகளான பணத்தபேடு கண்டிகை, ஆருர்கண்ணம்பாக்கம் புதிய ஏரி, சின்ன ஏரி, செல்லியம்மன் குளம், ஆகிய ஏரிகளில் 75 முதல் 85 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை கிராம பொதுமக்கள் மற்றும் பாசன விவசாயிகள் குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ரூபாய் 10 கோடியே 17 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகள் தூர்வாரப்படுகிறது. மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக 200 சிறுபாசன ஏரிகளையும் 1612 குளம் குட்டை மற்றும் ஏரிகள் உள்ளிட்டவைகளை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.