திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அனைத்து முதல் நிலை அலுவலர்கள் மண்டல குழுக்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் 70 கிராமங்கள் அமைந்துள்ளன. மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்படும் முன்னெச்சரிக்கைகளை மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, நகராட்சி, பேரூராட்சி துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மீன்வளத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட கூடிய பகுதிகளாக 39 இடங்களும் மிதமான பாதிப்பு ஏற்பட கூடிய வகையில் 44 பகுதிகளும் குறைவாக பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகளாக 42 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய 64 மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.