தஞ்சாவூர்:காசியை விட புண்ணியம் அதிகம் கொண்ட ஸ்தலம் என்ற பெருமை தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆறு புஷ்ப மண்டப படித்துறைக்கு உண்டு. இத்தகைய சிறப்புமிக்க புஷ்ப மண்டப படித் துறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களான அரியலூர், திருவாருர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து புஷ்பமண்டப படித்துறையில் புனித நீராடினார்கள்.
பின்னர் மறைந்த தங்கள் மூதாதையர்கள் நினைவாக பச்சரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி தர்ப்பணம் செய்தனர். எள், பச்சரியை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பன்னர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும், குடும்பமும், சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.
அந்தவகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆறு படித்துறையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். மூதாதையர்களுக்கு பூஜை செய்ய எள், பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் கொண்டு தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.