தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 கொலை, 1 தற்கொலை: டிக்டோக் வீடியோவால் நடந்த விபரீதம் - tiktok

திருவள்ளூர்: டிக்டோக் வீடியோவால் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட நபர் வீடியோவை பதிவிட்ட நண்பனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டோக்கால் தற்கொலை

By

Published : Jul 3, 2019, 6:52 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கார்த்திகேயபுரம் கிராமம் அருகே ஏரிக்கரையின் ஓடையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதனைப் பார்த்த பொதுமக்கள் திருத்தணி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, இறந்த வாலிபர் அருகில் பூச்சி மருந்து பாட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் இருந்துள்ளது.

டிக்டோக் வீடியோவால் வாலிபர் தற்கொலை

சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை குறித்து காவல்துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, இறந்த வாலிபர் திருத்தணி அடுத்த தளவாடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்று தெரியவந்தது.வெங்கட்ராமன் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனது நண்பர் விஜி என்பவருடன் சேர்ந்து டிக்டோக் வீடியோவில் வேறு சமூக மக்களை அவதூறாகப் பேசியுள்ளார். இந்த வீடியோவை விஜி சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனால் அந்த சமூக மக்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வெங்கட்ராமன், விஜி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி இரவு, விஜியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு வெங்கட்ராமன் சரணடைந்தார்.

சமூக வலைதளத்தில் விஜி வீடியோவை பதிவேற்றம் செய்ததால் தான் இவ்வளவு பிரச்னை என வெங்கட்ராமன் ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. தற்போது வெங்கட்ராமன் மீது கொலை வழக்கு, டிக்டோக் அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அதிக ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.டிக்டோக்கை தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாக ஏற்பட்ட விபரீதத்தால் இளைஞர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இளைஞர்கள் சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details