திருவள்ளூர்ஒன்றியம் கிளாம்பாக்கம் ஊராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்கு ரெபேக்கா மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் புதிதாக சேர்ந்த 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் சேர்க்கையை வரவேற்கும் விதமாக இலவச சைக்கிள் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், கனரா வங்கி நிறுவன விற்பனை பிரிவு மேலாளர் ராம்குமார், சென்னை தலைமை அலுவலர் மேலாளர் ஜான் சில்வர்சன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தம் புதிய சைக்கிளை வழங்கினர்.
கிளாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கிளாரா ஜெயசுந்தரி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் தணிகாசலம் பேசுகையில், ’ கடந்த ஆண்டு பள்ளியில் 150 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 100 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நூலகம் மற்றும் ஆய்வக அறை உள்ளிட்டவற்றை வகுப்பறையாக பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டில் மாணவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து கல்வி பயில வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’ என வருத்தம் தெரிவித்த தலைமையாசிரியர் இதுகுறித்து அரசிடமும் தனியார் நிறுவனங்களிடமும் வகுப்பறையைக் கட்டி கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்
இதையும் படிங்க:பள்ளி வகுப்பறையில் பாம்பு... பெற்றோர் போராட்டம்...