தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2021, 6:12 PM IST

Updated : Jul 8, 2021, 7:32 PM IST

ETV Bharat / state

’அஞ்சலி பாப்பா’வாக மாறிய அனிதா ராதாகிருஷ்ணனால் சிரிப்பலை

பழவேற்காட்டில் படகிலிருந்து இறங்கி உப்பங்கழி நீரில் கால்வைக்க தயங்கிய மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, மீனவர் ஒருவர் குழந்தைபோல இடுப்பில் தூக்கிச் சென்று கரை சேர்த்த நிகழ்வு சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: பழவேற்காட்டில் உப்பங்கழி ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்ட மணல் அரிப்பால் நுழைவுவாயில் அடைபட்டுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் தரைதட்டி பழுதாகி பெரும் பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன், ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், டி.ஜெ. கோவிந்தராசன் ஆகியோர் படகில் உடன் சென்றனர்.

பாரம் தாங்காமல் தத்தளித்த படகு

அப்போது ஏழு பேர் செல்லக்கூடிய படகில், ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்ததால் படகு பாரம் தாங்காமல் தத்தளித்தது.

இதனையடுத்து பயணித்த படகில் இருந்த சிலர், மற்றொரு படகில் ஏற்றி அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் முகத்துவாரம் பகுதியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வுசெய்தார். அப்போது அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை ’அலேக்காக’ தூக்கி செல்வது தொடர்பான காணொலி

மீனவர்களைச் சமாதானப்படுத்திய பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

முகத்துவாரம் தூர்வாரும் பணி விரைவில்

அப்போது அவர் பேசுகையில், ”திமுக தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தற்காலிகமாக 28 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

மீனவர்களின் கருத்தின்படி, பழவேற்காடு பகுதியில் அனைத்து வசதிகளுடன்கூடிய அதிநவீன மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலின் அளவை உயர்த்துவதற்கான அறிவிப்பு வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளியாகும்” என்றார்.

அஞ்சலி பாப்பாவாக மாறிய அமைச்சர்

பின்னர் ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், படகிலிருந்து இறங்கி உப்பங்கழி நீரில் கால்வைக்கத் தயங்கினார்.

அப்போது அங்கிருந்த மீனவர் ஒருவர், அனிதா ராதாகிருஷ்ணனை குழந்தைபோல அலேக்காக இடுப்பில் தூக்கி அமரவைத்து கரை சேர்த்தார்.

இதனைக் கண்ட அங்கிருந்தோர் அமைச்சர், 'அஞ்சலி பாப்பா'வாகவே மாறிவிட்டார் என்று முணுமுணுத்தபடி சென்றது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:’போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்து ஓபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது’ - அமைச்சர் சாடல்

Last Updated : Jul 8, 2021, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details