திருவள்ளூர் அடுத்த நேமம் கிராமத்தில் உள்ள ஆவுண்டீஸ்வரர் திருக்கோயிலில் தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் இன்று(ஜனவரி 18) சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை மாநில ஓபிசி அணித் தலைவர் லோகநாதன், திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் ராஜ்குமார், பொதுச்செயலாளர் கருணாகரன் ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து கோயில் சார்பில் சிவாச்சாரியார் குமார் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்ணகும்ப மரியாதை அளித்தனர். பின், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
சாமி தரிசனத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், 'கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்கள் பாதுகாத்து பராமரிக்கப்பட வேண்டும், கோயில்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களில் உள்ள அர்த்தங்களை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும், கோயில்களில் உள்ள குளங்களை தூர்வார அறநிலையத் துறையிடம் பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவுண்டீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் தெலங்கானா ஆளுநர் வருகையையொட்டி, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் எஸ்.பி.அரவிந்தன் உத்தரவின்பேரில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். கோயில் அருகே கூடியிருந்த பொதுமக்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.