திருவள்ளூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவள்ளூர் மாவட்ட குழு சார்பில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று (மே 06) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்காத, இனியும் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லாத கரம்பாக உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மாற்று இடம் என்ற பெயரில் உள்ளூரில் வசிக்கும் மக்களை வெகுதூரத்திற்கு மாற்றுவதை நிறுத்தி முன்பு குடியிருந்த பகுதியின் அருகேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், அனைத்து கோவில் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.