மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று இறந்துபோன முன்னோர்களுக்கு படையல் செய்யும் வழக்கம் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்து படையல் செய்வதும் புண்ணியத் திருத்தலங்கள் சென்று வழிபடுவதும் மரபாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில் தை அமாவாசை என்பது இந்து சமயத்தவர்கள் மத்தியில் மிகவும் சிறப்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதத்தைக் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூஜை செய்து தர்ப்பணம் செய்வார்கள்.
இதனிடையே தை அமாவாசை தினமான நேற்று திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோன்று தை அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் 500க்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களை எண்ணி வழிபட்டனர். பின்னர் தர்ப்பணத்திற்கு பயன்படுத்திய பொருட்களை வைகை ஆற்றில் கரைத்துச் சென்றனர். மேலும், தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு புனித நீர்நிலைகளில் தர்ப்பணம் விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாசாணி அம்மன் கோயிலில் அம்மனுக்கு காவலாக இருக்கும் கருப்பசாமிக்கு 108 பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பெண்கள் தங்களின் முன்னோர்களை வழிபட்டனர். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகேயுள்ள திம்மசந்திரம் கிராமத்தில் புதியதாகக் கட்டப்பட்ட ஜெய் ஸ்ரீ வீராஞ்சநேய சுவாமி திருக்கோயில் 48ஆவது நாள் மண்டலாபிஷேக நிறைவை முன்னிட்டு 1008 பெண்கள் பால் குடம் எடுத்து வழிபாடுசெய்தனர்.
இதையும் படிங்க:'வீட்டைக் காணோம்' வடிவேலு பாணியில் கலெக்டரிடம் புகாரளித்த கூலித் தொழிலாளி!