சென்னை:தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாகக் கடந்த சில வாரங்களாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளிலிருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக இது வரை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் நடைமுறையிலிருந்த முழு ஊரடங்கு இன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டதால், சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின் பற்றாமலும் சாரை சாரையாகக் குவிந்தனர்.
இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக மீன் வரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில், குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே சந்தைக்கு வந்ததால், சாதாரண ரக மீன்கள் கூட ஒரு கிலோ ரூ.600 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
மூன்று மடங்கான வஞ்சிரம், வவ்வால்
மீன்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டமாக குவிந்தனர் இதேபோன்று வஞ்சிரம், வவ்வால், கிளி பாறை, இறால், நண்டு போன்றவை குறைந்த அளவே விற்பனைக்கு வந்ததால் வழக்கத்தைவிட அதன் விலை மூன்று மடங்கு கூடுதலாக விற்கப்பட்டது. இதன் காரணமாக ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க:மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு