திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாட்டிலேயே முதல் பெண் 108 அவசர ஊர்தி ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ளார், வீரலட்சுமி. இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரியும் இவரது கணவருடன் பிழைப்புக்காக தேனியிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்ந்திருக்கிறார், வீரலட்சுமி. வருமானமும் போதாமல் இருந்துள்ளது.
அதனைப் போக்க அரசுப் பள்ளியில் பிள்ளைகள் இருவரையும் சேர்த்துவிட்டு, தானும் கணவருடன் சேர்ந்து வாடகைக் கார் ஓட்டுநராக மாறினார், சாதனைப் பெண் வீரலட்சுமி. கரோனா காலத்தின் சந்தர்ப்பமோ; தேவையோ தெரியவில்லை. வீரலட்சுமியின் கண்ணில் பட்டது, சென்னையில் அவசர ஊர்தி ஓட்டுநருக்கான தேர்வு படிவம்.
விண்ணப்பித்து தான் பார்போம் என்று, அப்பணிக்கு வீரலட்சுமி விண்ணப்பிக்க, அந்த வேலையே அவருக்கு கை கூடியது. பல எதிர்பார்ப்புகளுடன் தன் பணியை மேற்கொள்ள புறப்பட்டார், வீரலட்சுமி.
அவசர ஊர்தி ஓட்டுநர் பணி:
அவசர ஊர்தி ஓட்டுவது என்பது எளிதான காரியமில்லை. வாகனத்தை வேகமாக செலுத்த வேண்டும், காயமடைந்தவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்று தெரியாது. ரத்தம் வடிய கிடக்கும் காயப்பட்டவர்களை, எவ்வித சுணக்கமும் இன்றி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற பல சவால்கள் அவசர ஊர்தி ஓட்டுநர்களுக்குண்டு. இதனால் தான் இந்தத் தொழிலுக்கு வர ஆண்கள் கூட பெரிதும் விரும்புவதில்லை. அதுவும் கரோனா காலம் என்றால், இச்சேவையை பல ஓட்டுநர்கள் புறக்கணிப்பர். இது தொடர்பாக அனைத்தும் தனக்கு விளக்கப்பட்டது என்றும்; இச்சேவையை செய்ய நான் தயாராக இருப்பதாகவும்; பணி நேர்காணலில் அலுவலர்களிடம் தெரிவித்ததாக வீரலட்சுமி கூறுகிறார்.