திருவள்ளூர்: நேபாள நாட்டின் போக்ரா நகர ரங்கசாலா பகுதியில் நடைபெற்ற வாலிபால் பேட்டியில் கடந்த 21 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் தனியார் யூ.எஸ்.ஏ கிளப்பின் உரிமையாளர் நாகராஜ் தலைமையில் 20 பேர் பங்கேற்க சென்றனர்.
அந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் (27) என்பவர் நேற்று (டிச. 26) காலை 8 மணியளவில் நேபாள அணிக்கும் யூ.எஸ்.ஏ கிளப் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார். முதல் சுற்று விளையாடி முடித்தார்.
பின்னர் ஓய்வெடுக்க சென்றிருந்த அவர் திடீரென 11 மணியளவில் இரண்டு முறை வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அதன் பின் அவரை சக நண்பர்கள், யூ.எஸ்.ஏ கிளப்பின் உரிமையாளர் நாகராஜ் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின் நாகராஜ் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், உடலை அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.