திருவள்ளூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட கிளை தொடக்க விழா, ஊத்துக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு, கிளையைத் தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார். விவசாய விளைநிலங்கள் வழியாக 6 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என ஒட்டுமொத்த விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர். பாண்டியன், "தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச்சாலை திட்டம் விவசாய விளை நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தியும், கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் மணல் கொள்ளைகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தக் கோரியும், விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வலியுறுத்தியும் செப்டம்பர் 7ஆம் தேதி ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இந்த ஆறு வழிச்சாலைத் திட்டம், அதானி காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்தால் விவசாயிகளும் மீனவர்களும் பாதிக்கக் கூடும் என்பதால், எதிர்க்கட்சியாக இருந்த போது மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருப்பதால், நிச்சயமாக இந்த திட்டத்தை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் உயிர் உள்ளவரை விவசாய நிலங்களில் சாலை திட்டம் செயல்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்.