திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளநிலை,முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளில் மொத்தம் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்கலைக் கழக தேர்வுகள் அதே கல்லூரியில் நடந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த பல்கலைக்கழகத் தேர்வில் சில மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதி, தேர்வு மையத்தில் இருந்து கண்காணிப்பாளர்கள் கையும் களவுமாக பிடித்து மாணவர்களைத் தேர்வு எழுதவிடாமல் செய்தனர்.
இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் திருத்தணி அரசினர் கலைக்கல்லூரியில் இருந்த தேர்வு மையத்தை ரத்து செய்தது. அடுத்த மாதம் நடக்கவுள்ள பல்கலைக்கழக தேர்வு பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுமென வதந்தி பரவியது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து, ரத்து செய்த தேர்வு மையத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.