திருவள்ளூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்ட வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை காலத்தில் மக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் இருக்க அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
"இதனை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுப்பையன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சுப்பையன் , சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி, கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு, உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்கள் மட்டும் அல்லாமல் கரையோர அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை மூலம் 91 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. ஆறுகளில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 950 கிலோ மீட்டர் தூரம்வரை நீர்நிலை கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டு மழை நீர் தேங்காதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.