திருவள்ளூர்: திருத்தணியில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலையில், கடந்த நான்காம் தேதி அன்று நந்தன் என்பவர் தமிழ்நாடு அரசு வழங்கிய பரிசு தொகுப்பை பெற்றுச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏழாம் தேதி பிற்பகல், கூட்டுறவு பண்டக சாலைக்கு வந்து அங்குள்ள விற்பனையாளர் சரவணனிடம் தனக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பு புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக மொபைல் போனில் ஒரு புகைப்படத்தை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
அப்போது விற்பனையாளர் சரவணன், அந்த புளி பாக்கெட்டை கொண்டுவரும்படி கேட்டபோது, அதைக் கொண்டு வராமல் புகைப்படத்தை மட்டுமே ஆதாரமாக வைத்து பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.
விசாரணையின் அடிப்படையில் நந்தன், தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்புவதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது திருத்தணி காவல் துறையினர், பண்டக விற்பனையாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்கள் முன்னிலையில் அரசு வழங்கிய பொருள் குறித்து அவதூறு பரப்பியதாக சட்டபிரிவு 341, 505ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்நிலையில் நந்தன் மகன் பாபு என்கிற குப்புசாமி என்பவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலைக்கு முயன்று 70 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.