திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்திலுள்ள நிலக்கரி கிடங்குகளை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஏகப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் சரிசெய்யப்படும் என ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத்தை, சரியான வழியில் பயன்படுத்தி, மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய மின்வாரியத்தில், இவ்வளவு பெரிய தவறுகள் நடத்தியிருக்கும், கடந்த அதிமுக அரசை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது.
தவறு இழைத்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. மின்வாரியத்தில் நன்றாக உழைக்கக்கூடிய அலுவலர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் மின்வாரியம் உள்ளது. மோசமான நிர்வாகத்திலிருந்து மின்வாரியத்தை மீட்டெடுத்து, வெளிப்படையான நிர்வாகத்தை மின்வாரியம் முன்னெடுக்கும்.
நிலக்கரி காணவில்லை
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியைக் காணவில்லை. இதில் குற்றம்புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.