திருவள்ளூர்: பழவேற்காட்டில் அண்மையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் உப்பங்கழி ஏரியை கடந்து கடல்நீரானது லைட் ஹவுஸ், துறைமுகம் இடையே செல்லும் ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை மூழ்கடித்தது. இதில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பின்னர் கடல் நீரானது உள்வாங்கி இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும், கடல் நீருடன் அடித்து வரப்பட்ட மணலானது சாலை முழுவதும் பரவி உள்ளது. இதனால் துறைமுகச்சாலை பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.