திருவள்ளூர்:சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல்என்டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
4ஆம் நாள் தொடர் போராட்டமாக நேற்று (மே. 26) பழவேற்காட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் பழவேற்காட்டில் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 250 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எஞ்சிய 1,500 பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் பழவேற்காட்டில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஆண்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கருப்பு கொடிகளை கட்டிக் கொண்டு பழவேற்காடு முகத்துவாரம் வழியே கடலுக்கு சென்றனர். துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளியில் இருந்து கப்பல்கள் உள்ளே செல்லாத வகையிலும், உள்ளே இருந்து கப்பல்கள் வெளியே வராத வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக பழவேற்காட்டில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மீனவர்களை சமரசம் செய்வதற்காக பழவேற்காட்டில் முகாமிட்டுள்ளனர். 4ஆவது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பழவேற்காட்டில் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க:ஒன்றிய அரசு என ஒப்புக்கொண்ட மோடி: திமுகவினர் ஆரவாரம்