அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், சசிகலா திருத்தணி உள்ளிட்ட வடதமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருத்தணி சென்ற சசிகலாவுக்கு, அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ”உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். திருத்தணி தொகுதியில் உள்ள கைத்தறி தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கூலி தரவில்லை; அதேபோல் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான இறுதியாக வழங்கவேண்டிய கூலியை இன்னும் நெசவாளர்களுக்கு வழங்காததைக் கண்டித்து நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை திமுக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல நெசவாளர்களுக்கான நியாயமான கோரிக்கையான, கைத்தறி மற்றும் விசைத்தறி பூங்காவை பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டையில் அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.