திருவள்ளூர்:திருத்தணியில் புரட்சிப் பயணம் என்னும் தலைப்பில் அரசியல் பயணம் மேற்கொண்ட சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்கள் எடுக்கும் முடிவு. அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. தனிப்பட்டவர் ஒருவர் எடுக்கும் முடிவு அல்ல.
இதுவரைக்கும் தொண்டர்கள் யாரும் இரட்டை இலை சின்னம் பொறித்த கொடியை என்னுடைய காரில் கட்ட வேண்டாம் என சொல்லவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் என்னுடைய காரில், அதிமுக கொடியைக் கட்டுவதற்கு எனக்கு உரிமை உண்டு. அதிமுக கட்சி எங்கள் நிறுவனத்தலைவருடைய சட்டதிட்டவிதிகள்படி தொண்டர்கள் எடுக்கும் முடிவுபடியே நடைபெறும்.
தொடர்ந்து நான் சுற்றுப்பயணம் சென்று கொண்டு வருகிறேன். ஓ.பன்னீர் செல்வம் போவதற்கும் நான் செல்வதற்கும் எந்த ஒரு காரணமும் இல்லை. என்னுடைய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் சரியாக வழக்கை நடத்தும். அதிமுக பிளவு ஏற்படுவதற்கு காரணம் திமுகதான். அதிமுக 3 பிளவாக இருந்தால் அது திமுகவுக்குத் தான் பலன்.
திமுக ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு அம்மாவுடைய ஆட்சி நடைபெற்றதற்கும் திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதற்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.
செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி நடைபெறும். ஏழைகளின் ஆட்சியாக நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க:புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் - அமைச்சர் பொன்முடி!