திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கன்னி மாநகர் பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. இதனை சென்னையைச் சேர்ந்த 35 வயது கொண்ட மணிகண்டன் என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் நெகிழிகள், மிட்டாய்களை வைத்து அருகிலுள்ள கடைகளுக்கு விற்பனை செய்து நடத்திவந்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல் இந்நிலையில், அந்தக் குடோனில் சட்டத்திற்குப் புறம்பாக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கிவைத்து அதனை திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில், வெங்கத்தூர் கன்னி மாநகர் பகுதியில் உள்ள குடோனில் காவல் துறையினர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அங்கு குவியல் குவியலாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ரூ.70 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பதுக்கிவைத்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல் துரையினர் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருட்கள் பதுக்கிவைத்ததாக மணிகண்டனை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர், பின்பு, இது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.