திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று (ஜூலை 15) காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் இ-பாஸ் இல்லாமல் ஆந்திர மாநிலம் ஓங்கோலிலிருந்து வருவது தெரியவந்தது. காரிலிருந்த மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், காரை காவல் துறையினர் சோதனையிட்டனர்.
அதில், காரின் டிக்கியில் குப்பை போல் இருந்த நான்கு பைகளில் 1 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் வந்த ஓங்கோலைச் சேர்ந்த லட்சுமி நாராயணன்(54), வசந்த்(35), சிலுக்கலூர்பேட்டையைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். காரையும் பணத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், கைதுசெய்த மூவரையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினர் கணக்கீடு செய்தபோது, 5 கோடியே 22 லட்சம் ரூபாய் அதிலிருந்தது தெரியவந்தது. மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தொடர்ந்து எல்லைப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த வாகனம் எத்தனை முறை கடந்திருக்கிறது என்பதையும் சோதனை செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில், இந்தப் பணம் ஆந்திர மாநில அமைச்சர் பலினேனி ஸ்ரீநிவாஸ், ஓங்கோலிலிருந்து கோவையில் உள்ள ஒரு முக்கியப் புள்ளிக்கு அனுப்பிவைத்ததாகக் காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.