திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியிலுள்ள சமுதாயக்கூடம் அருகில், பொன்னேரி பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுதாகர், வீரா என்ற இரண்டு ரவுடிகள், தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களுடைய உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வாலிபால் விளையாட்டுத் திடலில் இளைஞர்களிடம் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து அந்த இளைஞர்கள் கல்லால் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும், முன்விரோதம் காரணமாக இருவரும் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதுகுறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், “இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு, கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தவர்கள். இவர்கள் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிழுவையில் உள்ளன. இது தொடர்பாக தற்போது வரை ஐந்துபேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். விசாரணையின் முடிவிலேயே கொலைக்கான காரணம் தெரியும்” என்றார்.
ரவுடிகள் தலையில் கல்லைப்போட்டு கொலை கடந்த 2018ஆம் ஆண்டு பென்னேரி பகுதியைச் சேர்ந்த அஜித்(21) என்பவர், ரயில்வே சுரங்கப்பாதை அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தற்போது கொலை செய்யப்பட்டுள்ள இருவரும் ஈடுபட்டிருந்ததாகவும், அதன் பழிவாங்கும் செயலாக கூட இக்கொலைகள் நடந்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் விசாரணையை துரிதபடுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:மதுரவாயலில் தலையில் கல்லைப் போட்டு இளைஞர் கொலை!