திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை பஜார் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (44) என்பவர் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்கும் கடை, மளிகை கடை நடத்தி வருகிறார்.
அதேபோல் ஈஸ்வரன் என்பவர் சொந்தமான வெற்றி ஸ்டோர்ஸ் என்னும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (ஏப்.23) இரவு இந்த மூன்று கடைகளின் இரும்பு ஷட்டரை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்காணிப்புக் கேமராவின் வயர்களை துண்டித்துவிட்டு, கடைகளுக்குள் நுழைந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இதையடுத்து இன்று (ஏப்.24) காலை கடைக்குச் சென்ற கடையின் உரிமையாளர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை காவல் துறையினர், திருட்டு நடந்த கடைகளில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாத்திரக் கடையில் 7 ஆயிரம் ரூபாயும், மளிகை கடையில் 7 ஆயிரம் ரூபாயும், மிட்டாய் கடையில் 2 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டு நடந்த கடைகளுக்கு அருகாமையிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.