திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில், 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்தில் கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழந்த, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த இழப்பீடு தொகை ரூ.50 லட்சம் தாமதமின்றி வழங்க வேண்டும், அரசாணைப்படி கருணைத் தொகை இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
அனைத்து அலுவலர்களுக்கும் உயர் தர தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர் ஜெய்கர் பிரபு, மாநில பொருளாளர் இளங்கோவன், மாநில செயலாளர்கள் வாசுகி, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.