திருவள்ளூர்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
திருத்தணி அருகில் உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் டி.டி.சி அப்ரூவல் பெற்ற வீட்டு மனைகளில் 10க்கும் மேற்பட்ட மாடி வீடு கட்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக, இந்த கிராமத்தின் அருகில் உள்ள டி.வி புரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த நீரினால் காசிநாதபுரம் மக்கள் வசிக்கும் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே வர முடியாத நிலையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் குழந்தைகள், பெண்கள் உள்பட ஒன்பது நபர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.