திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு அருகேவுள்ள வராக சுவாமி திருக்கோயில் பகுதியில் இன்று அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டு, அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர் தேடிப் பார்த்துள்ளனர்.
அப்போது முள்புதரில், பிறந்து ஒரு சில மணி நேரங்களேயான பெண் பச்சிளங்குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், குழந்தை நலமாக இருப்பதாகத் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், குழந்தையை மீட்டுச் சென்றனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தை முள்புதரில் வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரமடைந்து மனைவியை கத்தியால் குத்திய கணவன்